திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் 35 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: 150 எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கான புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்ட ரூ. 336கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மருத்துவமனைக் கட்டிடங்கள் 4, கல்லூரி கட்டிடங்கள் 2 மற்றும் குடியிருப்புக் கட்டிடங்கள் 15 என மொத்தம் 21 கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இதில் மருத்துவமனைக் கட்டிடங்கள் 6 தளங்களுடன் கட்டப்பட்டு வருகின்றன. இதில் 50 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும், 500 படுக்கை வசதி, 12 அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் நவீன ஆய்வகங்கள் அமைய உள்ளன. கல்லூரிக் கட்டிடங்களில், பயிலகக் கட்டிடங்கள் 7 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளன. 150 நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் வசதி, 8 துறைகளுக்கான வகுப்பறை மற்றும் ஆய்வக வசதிகள், நூலகவசதிகள் மற்றும் 900 பேர் அமரக்கூடிய வகையில் கலை அரங்க கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது.குடியிருப்புக் கட்டிடங்களில் கல்லூரி முதல்வர் குடியிருப்பு, நிலைய மருத்துவ அலுவலர் மற்றும் உதவி நிலையமருத்துவ அலுவலர் குடியிருப்பு, மாணவ, மாணவிகள், செவிலியர்விடுதிகள், உடற்பயிற்சிக்கூடம் உட்பட பல்வேறு பிரிவுகளில்கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தாண்டு நவம்பர், 30-ம் தேதிக்குள் முதல்கட்டமாக கட்டிடப் பணிகளை முடிக்க திட்டமிடபட்டுள்ளது. அனைத்துப் பணிகளும் 2022-ம் ஆண்டு ஏப்.28-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது ‘‘மருத்துவக்கல்லூரியில் வகுப்பறை, விடுதிக் கட்டிடங்கள் முடிவடையும் தருவாயில் இருப்பதால், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தேவையான வசதிகளுடன் வரும் ஆண்டில் கல்லூரி தொடங்கப்பட்டுவிடும். பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago