தேர்தலில் திமுக 180 தொகுதிக்கு மேல் வெற்றிபெறும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கணிப்பு

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலில் 180 தொகுதிக்கு மேல் திமுக வெற்றி பெறும் என கருத்து கணிப்பு வருகிறது. அதற்காக அதீத நம்பிக்கையுடன் இருக்கக் கூடாது, என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி பேசினார்.

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் ஆலோசனை மையம் திறப்பு விழா நடைபெற்றது. திமுக அமைப்பு செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான ஆர்.எஸ். பாரதி பங்கேற்று மையத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

பிஹார் தேர்தலில் முதல்முறையாக 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இது ஆபத்தானது. அவர்கள் தான் வாக்களித்தார்கள் என்பதை உறுதி செய்ய முடியாது. இதேபோல் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் விதிமுறைகளை மாற்றி இருக்கின்றனர். கடந்த தேர்தல்களை விட இம்முறை வேறு விதமாக இருக்கும். பல வாக்காளர்களை திட்டமிட்டு நீக்கி இருக்கிறார்கள்.

சென்னை காவலர் குடியிருப்பில் 581 வாக்குகளை நீக்க மனு அளித்தும் நீக்கவில்லை. கடந்த முறை 10 தொகுதிகளில் 500-க்கும் குறைவான வாக்குகளில் தோற்றுள்ளோம். பெயர் நீக்கம் சரிவர நடைபெற்று உள்ளதா என்பதை கட்சியினர் சரிபார்க்க வேண்டும்.

வாக்குச்சாவடி அமைப்பதிலும் மோசடி நடந்துள்ளது. மார்ச் முதல் வாரத்துக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். 80 வயதானவர்களை கண்காணித்து அடையாளப்படுத்த வேண்டும். தேர்தலுக்கு பின்னர் 20 நாட்கள் வரை வாக்குப்பெட்டி உள்ள ஸ்ட்ராங் ரூமை கண்காணிக்க வேண்டும்.

வரும் தேர்தலில் 180 தொகுதிக்கு மேல் திமுக வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு வருகிறது. அதற்காக அதீத நம்பிக்கையுடன் இருக்கக் கூடாது. நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை கருத்தில் கொள்ளக் கூடாது, என்றார்.

தேர்தல் அலுவலகம் திறப்பு

சேலத்தில் திமுக வழக்கறிஞர்களுக்கான தேர்தல் களப்பணி அலுவலகத்தை திமுக அமைப்பு செயலாளரும், எம்பி-யுமான ஆர்.எஸ்.பாரதி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட செயலாளரும், எம்எல்ஏ-வுமான ராஜேந்திரன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம், தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா முன்னிலை வகித்தனர்.

இதில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியது:

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிக்கும் சேர்த்து புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் மாளிகையில் அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. மார்ச் 1-ம் தேதி முதல் தேர்தல் முடியும் வரை வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் இருந்து களப்பணியாற்ற வேண்டும்.

வரும் தேர்தலில், ஆளுங்கட்சி செய்யும் சட்டவிரோத அதிகார துஷ்பிரயோகத்தை தடுக்க சட்டரீதியாக திமுக வழக்கறிஞர் அணி செயல்படும். திமுக ஆட்சிக்கு வந்தால் எட்டு வழிச்சாலை திட்டம் சட்ட ரீதியாக கைவிட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்