செய்யாறு அருகே 3 கி.மீ., தொலைவுக்கு சாலையை சீரமைக்கும் பணி தொடக்க நிலையிலேயே முடங்கிப் போனதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கிளியாத்தூர் – பாப்பாந்தாங்கல் இடையே 7 கி.மீ., தொலைவுக்கு சாலை உள்ளது. இந்த சாலை காஞ்சிபுரம் மற்றும் ஆற்காடு சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாகும்.
இந்நிலையில் கிளியாத்தூரில் இருந்து நெடும்பிறை இடையே 3 கி.மீ., தொலைவுக்கு சாலையை சீரமைக்கும் பணி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக, தார்ச்சாலை பெயர்க்கப்பட்டு, கருங் கற்கள் கொட்டப்பட்டன. பின்னர், சாலை அமைக்கும் பணி பாதியில் கைவிடப்பட்டது. அதன்பிறகு சாலை அமைக்கும் பணி நடைபெறவில்லை.
சாலையில் கொட்டப்பட்டுள்ள கருங்கற்கள் மீதே பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் வாகன ஓட்டிகள் உள்ளனர். கடந்த 3 மாதங்களாக, கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலையில் வாகனங்களை இயக்குவதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, “சாலை அமைக்கும் பணி, தொடக்க நிலையிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. சாலையில் கொட்டப்பட்டுள்ள கருங்கற்கள் பெயர்ந்து சிதறிக்கிடக்கின்றன. அதன்மீது வாகனங்களை ஓட்டிச் செல்ல சிரமமாக உள்ளது. அதிலும், இரு சக்கர வாகனங்களை இயக்கும்போது பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.
10 கிராம மக்கள் பயன்படுத்தும் முக்கியமான சாலை இது. காஞ்சிபுரம், ஆற்காடு மற்றும் செய்யாறு செல்வதற்கு, இந்த சாலையை பயன்படுத்த வேண்டும். மருத்துவ மனைக்கு செல்லும் நோயாளிகளின் நிலை பரிதாபமாக உள்ளது. மேலும், வேளாண் பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் திணறுகின்றனர்.
சாலையை சீரமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறையிடம் பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. சாலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கி, விரைவாக முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
நீண்ட காலமாக குண்டும் குழியு மாக இருந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்ற கிராம மக்களின் கோரிக்கைக்கு பிறகு தொடங்கப்பட்ட சாலை சீரமைப்புப் பணிகள் முடங்கி போனது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago