2-வது முறையாக தேர்வு கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் அரசுக் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த2020-2021ம் கல்வியாண்டில், ஏப்ரல் மாதத்தில் நடைபெறும்செமஸ்டர் தேர்வு நடைபெறவில்லை. இதனைத் தொடர்ந்து, இத்தேர்விற்கு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தவர்கள், அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதனிடையே, கரோனா காலத்தில் நடைபெறாத செமஸ்டர் தேர்வு மீண்டும் நடைபெறும். இதற்கு தேர்வு கட்டணம் வசூலிக்கவும் கல்லூரிகளுக்கு வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் அரசுக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், " தேர்வு வேண்டுமானால் மீண்டும் நடத்திக் கொள்ளட்டும். ஆனால், 2-வது முறையாக தேர்வுக்கட்டணம் வசூலிப்பதை ஏற்க மாட்டோம்" என தெரிவித்தனர். இதையடுத்து கல்லூரி தரப்பில் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், தற்போது தேர்வு கட்டணத்தை வசூலிக்கவில்லை. உங்களின் கோரிக்கைகளை பல்கலைக்கழகத்திடம் தெரிவித்து உரிய தீர்வு காண்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago