தத்தனூர், வாரப்பட்டி தொழிற்பூங்கா திட்டங்களை கைவிடுவதாக அரசாணை வெளியிட வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தத்தனூர், வாரப்பட்டி சிப்காட் தொழிற்பூங்கா திட்டங்களை கைவிடுவதாக அரசாணை வெளியிட வேண்டுமென தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் நிறுவனர் ஈசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தொழில் முன்னேற்றக் கழகமானது (சிப்காட்), திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த தத்தனூரில் 800 ஏக்கர் வேளாண் நிலத்தையும், கோவை மாவட்டம் சூலூர் அருகே வாரப்பட்டியில் 400 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்தி தொழிற்சாலைகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதையறிந்த அந்தந்த பகுதி பொதுமக்கள், திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

சமீபத்தில் தேர்தல் பரப்புரைக்காக பெருமாநல்லூர் வந்த முதல்வர் பழனிசாமி, தத்தனூர் சிப்காட் திட்டம் நிறுத்திவைக்கப்படுவதாக வாய்மொழியாக அறிவித்தார். உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியும், மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப வாரப்பட்டி திட்டம் வராது என்று உறுதிமொழி அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கோரிக்கைகளை புரிந்துகொண்டு வாய்மொழியாக உறுதிமொழி அளித்ததற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், மேற்கூறப்பட்ட இரண்டு திட்டங்களையும் செயல்படுத்தவுள்ள சிப்காட் நிறுவனம், இதுவரை எழுத்துப்பூர்வமாக 2 திட்டங்களும் கைவிடப்பட்டதாக எந்தவித அறிக்கையையும் வெளியிடவில்லை. அரசாணை மூலமாக அறிவிப்பது மட்டுமேநிரந்தரத் தீர்வு. தேர்தல் நேர வாக்குறுதியாக இல்லாமல், உடனடியாக தமிழக முதல்வரும், உள்ளாட்சித் துறை அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுத்து, 2 திட்டங்களையும் கைவிடுவ தாக அரசாணை பெற்று தந்து, உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்