உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் இஸ்லாமிய ஜமாத் நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி உறுதி

By செய்திப்பிரிவு

அனைத்து இஸ்லாமிய ஜமாத் அமைப்பினரின் ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இஸ்லாமிய ஜமாத் நிர்வாகிகள் பேசும்போது, "சிஏஏ போராட்டங்களின்போது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும், விசாரணைக் கைதிகளாக பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும். முகமது நபி குறித்து அவதூறாக பேசிய கல்யாணராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். திருப்பூர் மாநகரில் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் பள்ளி வசதிகளை மேம்படுத்த வேண்டும்.வேலம்பாளையம், படியூர், ராக்கியாபாளையம் பகுதிகளில் இறக்கும் இஸ்லாமியர்களை அடக்கம் செய்வதற்கான இட வசதிகளை செய்து தர வேண்டும்" என்றனர்.

முதல்வர் பழனிசாமி பேசும் போது, "இன்றைக்கு தமிழகத்தில் மதம், ஜாதி கலவரம் இல்லை. மாற்றுமதம் குறித்து அவதூறாக பேசியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைதிப் பூங்காவாக தமிழகம் திகழ்கிறது. நாச்சிபாளையத்தில் அடக்க ஸ்தலத்துக்கு 95 சென்ட் இடத்தின் ஆய்வுப் பணி நடைபெற்றுள்ளது. உங்கள் கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்றும்" என்றார்.

இதைத்தொடர்ந்து, காங்கயம் பகுதியில் விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பேசும்போது, "குடிமராமத்து, கால்வாய் சீரமைப்பு உள்ளிட்டவைகள் விவசாயிகளுக்காக செய்யப்பட்டுள்ளன. தண்ணீர் பற்றாக்குறை நிலையை மாற்றுவதற்குதான் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். விவசாயம் தான் எனது தொழில். அவர்கள் படும் இன்னல்களை களையவே பயிர்க் கடன் ரத்து செய்யப்பட்டது.

கொப்பரை தேங்காய் விலையை உயர்த்த வேண்டுமென மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். வீடு இல்லாத ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு 10,000 வீடுகள் கட்டித் தரப்படும். உடுமலைப்பேட்டை பகுதியில் கால்நடை ஆராய்ச்சிக் கூடம் அமைக்கப்படும்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்