தை அமாவாசையை ஒட்டி சென்னை மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் முன்னோருக்கு தர்ப்பணம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சென்னையில் கரோனா பரவல் காரணமாக தற்போது கோயில் குளங்களில் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்துக்கு வெளியே அதிகாலை 5 மணி முதலே ஏராளமானோர் தர்ப்பணம் கொடுக்க வந்த வண்ணம் இருந்தனர். கோயில் குளம் பூட்டப்பட்டிருந்ததால் அருகே உள்ள காரிய மண்டபத்தில் அவர்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.
வடபழனி முருகன் கோயில் குளத்தை சுற்றி உள்ள இடங்களிலும் ஏராளமானோர் தர்ப்பணம்செய்தனர். மெரினா கடற்கரையிலும் பலர் தர்ப்பணம் கொடுப்பதை பார்க்க முடிந்தது.
காஞ்சிபுரம் நகரில் பல்வேறுஇடங்களில் தை மாத அமாவாசையை ஒட்டி நீர்நிலைகளின் அருகேயும் மற்றும் கச்சபேஸ்வரர் கோயில் குளம், சர்வதீர்த்தம் குளம், தாயாரம்மன் குளம், திருப்புட்குழி விஜயராக பெருமாள் கோயில் குளத்தில் பலர் ஒன்றுகூடி புனித நீராடி தங்களின் முன்னோருக்கு தர்ப்பணம் அளித்தனர்.
மேலும், மறைந்த முன்னோருக்கு படையலிட்டனர். அதிகாலை முதலே இந்த தர்ப்பணம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றதால், கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கடற்கரை மற்றும் புண்டரீக புஷ்கரணி குளத்தின் கரையில், முன்னோருக்கு தர்ப்பணம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும், ஸ்தலசயன பெருமாள், திருப்போரூர் கந்தசுவாமி கோயில், பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள், கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் மற்றும் செங்கல்பட்டு நகரில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளக்கரையில் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago