சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார்.
பின்னர் அவர் கூறும்போது, “சாத்தனூர் அணையில் இருந்து எத்தனை நாட்களுக்கு தண்ணீர் திறப்பது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பாசனத்துக்கு 90 நாட்களுக்கு இடைவெளி விட்டு தண்ணீர் திறக்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நீர்வரத்துக் கால்வாய்களை தூர்வார வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
விவசாய சங்கப் பிரதிநிதிகளின் கருத்துக்கள் அடிப்படையில் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். விவசாயிகளின் கோரிக்கையின்படி, நீர்வரத்துக் கால்வாய்கள் தூர்வாரப்படும்” என்றார்.
119 அடி உயரம் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 111.65 அடியாக உள்ளது. அணையில் 5,754 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. அணையில் உள்ள பூங்கா பராமரிப்பு, நீர் இழப்பு, கூட்டுக் குடிநீர் திட்டம் போன்ற அடிப்படை தேவைகளுக்கு போக, 4,048.94 மில்லியன் கனஅடி தண்ணீரை கொண்டு இடது மற்றும் வலது புறக்கால்வாய் வழியாக 200 மற்றும் 250 கனஅடி தண்ணீர் 90 நாட்களுக்கு இடைவெளி விட்டு வழங்கவும் மற்றும் முதல் 30 நாட்களுக்கு நேரடி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், திருக்கோவிலூர் ஆயக்கட்டுக்கு 3 தவணைகளாக 1,200 மில்லியன் கனஅடி தண்ணீர் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago