மிகச்சிறிய செயற்கைக்கோள்களை தயாரித்து விண்ணில் செலுத்தப்பட்ட நிகழ்வில் பங்கேற்ற ராணிப்பேட்டை மாவட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை, மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் மத்தியில் விண்வெளி துறை மற்றும் மிகச் சிறிய செயற்கைக்கோள்கள் தயாரிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, பள்ளி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட 100 மிகச் சிறிய செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தும் நிகழ்வு ராமேஸ்வரத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.
கின்னஸ் சாதனை உட்பட 5 முக்கிய சாதனைகள் முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்த நிகழ்வில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 40 பேர் பங்கேற்றனர். இந்த மாணவ, மாணவிகளை, மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
அதேபோல், குடியரசு தினத்தன்று முதலமைச்சரின் வீரதீர செயல் புரிந்தமைக்கான அண்ணா விருது பெற்ற புலிவலம் அரசினர் உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை முல்லை என்பவரை, மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று பாராட்டினார்.
அப்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago