நூற்பாலைகள் அனைத்தும் நூல் விலையில் ஒன்றிணைந்து செயல்படுவது வருத்தமளிக்கிறது என, தொழில்துறையினர் தெரிவித் துள்ளனர்.
ஜவுளி பையிங் முகவர்கள் சங்கம் சார்பில் திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் இளங்கோவன், குமார் துரைசாமி உட்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசியதாவது: தற்சமயம் நூற்பாலைகள் அதீத லாப நோக்கத்தில் இயங்குவது பஞ்சு விலைக்கும், நூல் விலைக்கும் உள்ள வேறுபாடுகளின் வாயிலாக அறிகிறோம். நூற்பாலைகள் அனைத்தும் இதில் ஒன்றிணைந்து செயல்படுவது வருத்தமளிக்கிறது. இறக்குமதியாளர்களின் முகவர்களாக செயல்படும் நாங்கள், அவர்களிடத்தில் இங்குள்ள ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் அவலங்களை எடுத்துச் சொல்வதில் தயக்கம் காட்டுவதாக சொல்வது ஏற்புடையதாக இல்லை.
திருப்பூரில் ஏற்றுமதி செய்யப்படுவதில் 90 சதவீதம் ஆயத்த ஆடைகள், 10 சதவீதம் மட்டுமே உயர்வகை ஆடைகள். உயர்தர ஆயத்த ஆடை தயாரிப்பில் சிரமங்கள் ஏற்படும் சூழலில் அவற்றைஎடுத்துக் கூறி, விலை உயர்வைப்பெற இயலும். அவ்வாறு பெற்றும் தருகிறோம், அதற்கான இடமும் இறக்குமதியாளர்களிடம் உண்டு. ஆனால் அடிப்படை ஆடை ஏற்றுமதிக்கு அவ்வாறான சூழல் இல்லை, ஏனெனில் அதுபோன்ற ஆடைகளுக்கான விலை உலகளவில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்திய ஏற்றுமதியாளர்கள் வரி இல்லா வர்த்தக ஒப்பந்தத்தை பெற்றிருக்கும் நாடுகளுடன் போட்டிபோட வேண்டிய சூழல் உள்ளதை கருத்தில் கொள்ளவேண்டும். கரோனா காலகட்டத்துக்குப் பிறகு சற்றே ஆயத்தஆடை நிறுவனங்கள் வளரும் நிலையில், நூல் விலை உயர்வு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கைகள் அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago