வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி காஞ்சி, செங்கை மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 73 நாட்களாக டெல்லியில் தொடர்ந்து போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மோடி அரசை கண்டித்தும் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.எஸ்.செந்தில்குமார் தலைமையில் நேற்று பல்லாவரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பலியான விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேபோல் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் தமிழக காங்கிரஸ் சார்பில் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எல்ஐசி பங்குகளை விற்பதை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் பெரும்புதூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றிவிட்டு தற்போது விவசாயிகளிடம் கருத்து கேட்பது போல மோடி அரசு நாடகமாடி வருவதாகவும், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.
இதேபோல் திருக்கழுக்குன்றத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago