‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தால் திருப்பூர் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.28 கோடி வருவாய் கிடைக்கும் என்று, சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஸ்மார்ட் சிட்டி திட்டம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அத்திக்கடவு-அவிநாசி திட்டம் உட்பட திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு பணிகளை, பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் தலைமையிலான குழுவினர் நேற்று பார்வையிட்டனர்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் புதிதாக கட்டப்படும் பேருந்து நிலையம், தினசரி சந்தை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய பணிகள் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது அதிகாரிகள் கூறியதாவது: ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தைபொறுத்தவரை, கிடைக்கக்கூடிய வருவாய் முழுவதும் மாநக ராட்சிக்குதான் வருகிறது. இந்த புதிய திட்டங்கள் பயன்பாட்டுக்கு வந்தால் ரூ.10 கோடி வருவாய் கிடைக்கும். தற்போது ரூ.3 முதல் 4 கோடி வரைதான் வருகிறது. பல்லடம் தொகுதியில் சோலார் திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால், ஆண்டுக்கு ரூ.13 கோடி மின்சார செலவு மாநகராட்சிக்கு மிச்சமாகும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால், ஆண்டுக்கு ரூ. 28 கோடி வரை வருமானம் கிடைக்கும். ரூ.1122 கோடியில் அம்ரூத் திட்டம், ரூ.600 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், மேட்டுப்பாளையம் - திருப்பூருக்கு 55 கி.மீ. தொலைவில் மாநகருக்கு 4-ம் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இந்த திட்டம், 2048-ம் ஆண்டுவரை திருப்பூர் மாநகர மக்கள்தொகை அனுமானத்தின்படி கொண்டுவரப்படுகிறது. கரோனா காலம், ஒப்பந்தம் ஒதுக்கீடு, கடைகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக தாமதம் ஏற்பட்டதால், பணிகளும் தாமதமடைந்ததாக தெரிவித்தனர்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சு.குணசேகரன் வரும் வரை, திட்டம் தொடர்பாக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் தோப்பு வெங்காடசலம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த எம்.எல்.ஏ. சு.குணசேகரன், ‘என்னுடைய தொகுதியில் நேரடி விசாரணை என என்னிடம் மாநகராட்சி கூறவில்லை என்றார். இதையடுத்து, தோப்பு வெங்கடாசலத்துக்கு சால்வை அணிவித்து அவர் வரவேற்றார்.
இந்த ஆய்வில், சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன், ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் நடராஜன், கே.என். விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago