காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் மாற்றுத் திறனாளிகள் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை 3 ஆயிரமாக உயர்த்தித் தரவேண்டும், தனியார் துறைகளில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இடத்தை முழுமையாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நேற்று நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் நடைபெற்ற குடியேறும் போராட்டத்தில், சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகளான தாட்சாயினி, ரகு பிரகாஷ், சற்குணம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், அரசு அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றிய தலைவர் லிங்கன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் அருள்ராணி, பொருளாளர் திருஞானசம்மந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர், வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போராட்டக்காரர்களை திருப்போரூர் போலீஸார் கைது செய்து, மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

காஞ்சி மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் நடந்த குடியேறும் போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் பாலாஜி, மாவட்ட துணைத் தலைவர் தாமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் காது கேளாதோர் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆனந்தன், ஆரணி சுற்றுவட்டாரப் பகுதி தலைவர் தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று, கோரிக்கை முழக்கமிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்