காதலர் தினத்தையொட்டி ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் ரோஜா மலர், அந்த நாடுகளில் நிலவும் கரோனா கட்டுப்பாடுகளால் 80 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை வட்டங்களில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்துக்காக ஓசூரில் இருந்து பெங்களூரு மலர் வர்த்தக மையம் மூலம் சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு சுமார் 60 லட்சம் முதல் 75 லட்சம் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது, வெளிநாடுகளில் கரோனா கட்டுப்பாடுகள் தொடர்வதால், 80 சதவீதம் ரோஜா ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஓசூரைச் சேர்ந்த தோட்டக்கலைத்துறை வாரிய இயக்குநரும், மலர் விவசாயியுமான பாலசிவபிரசாத் கூறும்போது, ‘‘காதலர் தினத்துக்காக வெளிநாடுகளுக்கு ஓசூரில் இருந்து அதிகளவில் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.
நிகழாண்டில் 10 லட்சம் முதல் 15 லட்சம் பூக்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யும் நிலை உள்ளது. காதலர் தின ரோஜா ஏற்றுமதி 80 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மலர் ஏற்றுமதிக்கான விமானக் கட்டணமும் 4 மடங்கு உயர்ந்துள்ளது.
தற்போது, சிங்கப்பூர். மலேசியா, ஐக்கிய அரபு நாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள் பசுமைக் குடில்கள் அமைக்க தேசிய வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்து, வாழ்வாதாரம் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago