திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கர் நிலம் மீட்பு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

கடந்த 2011-ம் ஆண்டு முதல் தற்போது வரை, திருப்பூர் மாவட்டத்தில் ரூ.150 கோடி மதிப்புள்ள 1006.33 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பிரபாகரன், ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அலுவலகத்தை திறந்துவைத்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறும்போது, “கரூர், திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி, திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு இணை ஆணையர் மண்டலம் தொடங்கப்பட்டுள்ளது. கடலூர், நாகை, ஈரோடு, தூத்துக்குடி இணை ஆணையர் மண்டலங்கள் தொடங்கப்பட உள்ளன.

திருப்பூர், கரூர் மாவட்டங்களில் மொத்த கோயில்கள் 2041. உதவி ஆணையர்கள் 2, உதவி ஆணையர் / செயல் அலுவலர்கள் 3, செயல் அலுவலர்கள் 30, ஆய்வாளர்கள் 16 உள்ளனர். ஒருகால பூஜை கோயில்கள் 753 உள்ளன. திருப்பூர் இணை ஆணையர் மண்டலத்தில் 43 கோயில்களில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு முதல் தற்போது வரை, திருப்பூர் மாவட்டத்தில் 400 கோயில்களில் ரூ.15 கோடி, கரூர் மாவட்டத்தில் 450 கோயில்களில் ரூ.6 கோடி என ரூ.21 கோடி மதிப்பில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு முதல் தற்போது வரை திருப்பூர் மாவட்டத்தில் ரூ.150 கோடி மதிப்புள்ள 1006.33 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் ரூ.25 கோடி மதிப்புள்ள 245.93 ஏக்கர் நிலங்களும், ரூ.2 கோடி மதிப்புள்ள 19.382 சதுர அடி கட்டிடங்களும் மீட்கப்பட்டுள்ளன” என்றார்.

சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் சு.குணசேகரன், கே.என்.விஜயகுமார், உ.தனியரசு, திருப்பூர் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் நடராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்