கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலத்தில் ரூ.13.50 லட்சம் மதிப்பில் இணையதள வசதியுடன் கூடிய பயணியர் நிழற்கூடம் அமைக்கும் பணியை, காங்கிரஸ் எம்பி செல்லக்குமார் தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி - சேலம் சாலையில் ஆவின் மேம்பாலம் அருகில் நீண்ட நாட்களாக பொதுமக்கள் பேருந்திற்காக வெயில் மற்றும் மழையில் காத்திருந்தனர். இதனால் இங்கு பயணியர் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் செல்லக்குமார், தனது தொகுதி நிதியில் இருந்து ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை நடந்தது. எம்பி செல்லக்குமார் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
அப்போது எம்பி கூறியதாவது:
நிழற்கூடம் 18 அடி அகலமும், 8 அடி நீளம் கொண்ட தாகவும், மழை நீர் சேகரிப்பு வசதி, கண்காணிப்பு கேமரா, பேருந்துகளின் விவரங்களை டிஜிட்டல் டிஸ்பிளேவாக அறிவிப்பது, மின்விசிறி வசதி மற்றும் குப்பை அகற்றும் வசதியுடன் முழுவதும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் அமைக்கப்படுகிறது. இங்கு இணையதளம் (வைபை) வசதியும் ஏற்படுத்தப்படுகிறது, என்றார்.
இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம், மனித உரிமைத்துறை மாவட்டத் தலைவர் லலித் ஆண்டனி, எஸ்சி துறை மாநில அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, மாவட்ட துணைத் தலைவர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, பசவண்ண கோவில், மேடுகம்பள்ளி, காளிக்கோவில் கிராமங்களில் பொதுமக்களிடம் மனுக்களை எம்பி பெற்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago