ரங்கம் ரங்கநாதர் கோயிலின் உபகோயிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இக்கோயிலில் திருமொழி திருநாள் பிப்.4-ம் தேதி தொடங்கி பிப்.7-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த நாட்களில் மாலையில் தாயார் மூலஸ்தானத்தில் திரு மொழி சேவித்தல் நிகழ்ச்சி நடை பெற்றது.
இதைத் தொடர்ந்து திருவாய் மொழி திருநாள் (ராப்பத்து) நேற்று தொடங்கியது. இதை யொட்டி மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார். 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து வழிநடை உபயங்கள் கண்டருளி ஆழ்வார், ஆச்சாரியார் மரியாதையாகி திருவாய்மொழி ஆஸ்தான மண்டபத்தை சேர்ந்தார். அங்கு திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு பக்தர்கள் சேவை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மண்டபத்தி லிருந்து புறப்பட்டு, 9.45 மணிக்கு தாயார் மூலஸ்தானம் சென்றடைந்தார். தொடர்ந்து, பிப்.12-ம் தேதி வரை தினந்தோறும் தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சொர்க்கவாசல் வழியாக திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
இவ்விழாவின் நிறைவு நாளான பிப்.13-ம் தேதி மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இயற்பா தொடக்கம், இயற்பா ப்ரபந்தம் சேவித்தல், வெள்ளிச்சம்பா அமுது செய்தல் ஆகியவை நடைபெற்று இரவு 7.45 மணிக்கு இயற்பா சாற்றுமுறை நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் ஊழியர்கள் செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago