கறவை மாடுகளின் உடல் செயல்பாட்டுக்கும், இனப்பெருக்கத்துக்கும், பால் உற்பத்திக்கும் தாது உப்புகள் முக்கியப் பங்கு வகிப்பவை. மாடுகள் பருவமடைதல், சினைப்பிடித்தல், கன்று ஈனுதல் மற்றும் பால் உற்பத்தி போன்ற ஒவ்வொரு பருவ நிலையிலும் தாது உப்புகளின் பயன்பாடு மிகவும் அவசியம்.
மாடுகளின் உடல் வளர்ச்சியில் அதிக அளவில் தேவைப்படும் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம், குளோரின், பொட்டாசியம், சல்பர் ஆகிய பேரூட்ட தாதுக்களும், மிகவும் குறைந்த அளவில் தேவைப்படும் இரும்பு, கோபால்ட், தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம், அயோடின், செலினியம், மாலிப்டினம், குரோமியம், புளுரின், சிலிகான், நிக்கல், போரான், காரீயம், லித்தியம் ஆர்செனிக் ஆகிய நுண்ணூட்ட தாதுக்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பேரூட்ட, நுண்ணூட்ட தாது உப்புகளில் பற்றாக்குறை ஏற்படும்போது உடல்வளர்ச்சிக் குறைவு, இனப்பெருக்க கோளாறுகள், பால் உற்பத்தி குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
திருப்பூர் மாவட்டத்தில் பால் உற்பத்திக்காக 2.50 லட்சம் கலப்பின கறவை மாடுகள் வளர்க்கப்படுகின்றன. அதிக பால் உற்பத்தி செய்யும் கலப்பின கறவை மாடுகளில், தாது உப்புகளின் பற்றாக்குறையால் கன்று ஈன்று 24-48 மணி நேரத்தில் ஏற்படும் பால் காய்ச்சலால் மிகுந்த பொருளாதார இழப்பு உண்டாகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத் தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ந.ஆனந்தராஜா, கால்நடை மருத்துவ அறிவியல் உதவிப் பேராசிரியர் ப.சித்ரா ஆகியோர் கூறும்போது, "மாடுகளின் உடலில் தாது உப்புகளை உற்பத்தி செய்ய முடியாது. மாடுகள் உட்கொள்ளும் தீவனங்களிலிருந்தே அவற்றுக்கு தேவையான தாது உப்புகள் கிடைக்கிறது. கன்று ஈன்ற கலப்பின மாடுகளில் மீண்டும் சினைக்கு வருதல், சினைமுட்டை வெளியேறுதல், கரு உருவாகி கருப்பையில் தங்குதல், கன்று ஈனுதல், நஞ்சுக்கொடி தங்காமை போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கு, தாது உப்புக் கலவை மிகவும் அவசியம்.
கறவை மாடுகளுக்கு கலப்பு தீவனம் கொடுக்காமல் மக்காச்சோளம், அரிசி, தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றை கொடுப்போர், தினமும் 30 முதல் 50 கிராம் வரை தாது உப்புக் கலவை கொடுக்க வேண்டும். இதனுடன் 25 முதல் 30 கிராம் சாப்பாட்டு உப்பையும் சேர்த்து கொடுக்க வேண்டும். இதனால் கறவை மாடுகளின் உற்பத்தித்திறன் மற்றும் இனப்பெருக்கத்திறன் அதிகரிப்பதோடு, கன்று ஈன்ற மாடுகளில் ஏற்படும் பால் காய்ச்சல் பாதிப்பையும் கட்டுப்படுத்தலாம்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago