சுமார் ரூ.7 லட்சம் கோடி வரை கடன் சுமை இருப்பதால் தமிழக அரசின் நிதிநிலை அடுத்த 2 மாதங்களுக்கு தாங்குமா? என்பதே சந்தேகம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட இளை ஞரணி ஆலோசனைக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜமார்த்தாண்டம் தலைமை வகித்தார். அவைத் தலைவர் முகமது சகி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), கார்த்திகேயன் (வேலூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுகபொதுச் செயலாளர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப் பில் துரைமுருகன் கூறும்போது, "கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புதமிழக அரசின் கடன் சுமை ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது, ரூ.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது தான் அதிமுக அரசின் சாதனை. அரசின் வருமானம் இனி வட்டி கட்டுவதற்கே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
தமிழக அரசின் நிதிநிலை அடுத்த2 மாதங்களுக்கு தாங்குமா? என்பதே சந்தேகம். நிதி பற்றாக் குறையால் அரசின் பல்வேறு துறை ஊழியர்களுக்கு தற்போது பாதி சம்பளம் மட்டுமே வழங்கப் படுகிறது. தமிழகத்தில் எந்த தொகுதியிலும் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட வில்லை. உதாரணம், காங்கேய நல்லூர் - சத்துவாச்சாரி இணைப்பு பாலம். இந்த சாதாரண பாலத்தை கூட அதிமுக ஆட்சியில் கட்ட முடியவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதையே முதல்வர் தற்போது அறிவித்துள்ளார். அதே போல, போன் செய்தால் குறைகள் தீர்க்கப்படும் எனக்கூறி தொலை பேசி எண்ணை முதல்வர் அறிவித் துள்ளார். இது சாத்தியப்படாது. சமீபகாலமாக முதல்வர் திசைமாறி பேசி வருகிறார்.
பேரறிவாளன் உட்பட 7 பேரின்விடுதலையை திமுக ஆரம்ப காலத் தில் இருந்தே ஆதரித்து வருகிறது. எப்போதும் எதிர்க்கவில்லை. இலங்கையில் தமிழர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது கண்டிக்கத்தக்கது. ராஜபக்சே இருக்கும் வரை அங்கு தமிழர்களின் உயிருக்கு ஆபத்து தான்.
முதல்வர் வருகையையொட்டிஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள் ளன. ஆங்காங்கே பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவை அதிமுக அரசு மீறியுள்ளது. காட்பாடி வழியாக முதல்வர் வருவதையொட்டி காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் இரவோடு இரவாக தார் ஊற்றி சாலை அமைத்துள்ளனர். அந்த மேம்பாலத்தை சீரமைக்கும்போது மீண்டும் தோண்டும் நிலை உருவாகும். அரசுப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறை முதல்வர் வசம் உள்ளபோது, தமிழக டிஜிபியிடம் அதிமுக அமைச்சர்கள் மனு அளித்திருப்பது கேவலமாக உள்ளது. சசிகலா வருகை குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை. திமுக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago