கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு, விவசாயிகள் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் வெளியிட்ட அறிக்கையில், "விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்ததமிழக முதல்வருக்கு நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதே நேரம், பெருமளவு விவசாயிகள் தேசிய வங்கிகளில் பயிர்க் கடன், விவசாய நகைக் கடன், டிராக்டர் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான விவசாய கடன்களை பெற்றுள்ளனர். அவர்களும் கடன் சிக்கலில் உள்ளனர். எனவே, தேசிய வங்கிகளில் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். உயர்மின் கோபுரங்கள் விவகாரம், 8 வழிச்சாலை திட்டம், கெயில், ஐடிபிஎல் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் ஆகிய பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வு கண்டு, உண்மையான உழவன் மகனாக முதல்வர் விளங்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறும்போது, "கரோனா, புயல், வெள்ளம் என பலதரப்பட்ட சிக்கல்களால் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்று, திரும்ப கட்ட முடியாமல் தவித்த விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில், அக்கடன்களை தள்ளுபடி செய்த முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி" என்றார்.
பாரதிய கிஷான் சங்க மாவட்ட தலைவர் எம்.வேலுசாமி கூறும்போது, "கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகள், கடந்தாண்டின் பல்வேறு பாதிப்புகள் மற்றும் கடந்த ஜனவரி மாதத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்டு வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாமல் தவித்தனர். முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. இதேபோல, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றகடன்களையும் தள்ளுபடி செய்தால், அனைத்து விவசாயிகளும் பயனடைவார்கள்" என்றார்.
களஞ்சியம் விவசாயிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், "விவசாயிகளின் நீண்ட நாள்கோரிக்கையை ஏற்று, கடன்களை தள்ளுபடி செய்து அவர்களை கடனில் இருந்து மீட்ட முதல்வருக்கு நன்றி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago