சாலை விபத்துகளைத் தடுக்க ரூ.600 கோடி ஒதுக்கீடு கிருஷ்ணகிரி எஸ்பி பண்டிகங்காதர் தகவல்

By செய்திப்பிரிவு

சாலை விபத்துகளைத் தடுக்க மத்திய அரசு ரூ.600 கோடி ஒதுக்கியுள்ளது என கிருஷ்ணகிரியில் எஸ்பி பண்டி கங்காதர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலைப் பாதுகாப்பு மாத விழாவையொட்டி, கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் லாரி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், ஏடிஎஸ்பி ராஜி, டிஎஸ்பி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனைகள் செய்யப்பட்டன.

மருத்துவ முகாமை மாவட்ட எஸ்பி பண்டி கங்காதர் தலைமை வகித்து தொடங்கி வைத்து பேசியதாவது:

மத்திய, மாநில அரசுகள் சாலை விபத்துகளைத் தடுக்க பெரும் அளவில் முயற்சி எடுத்து வருகின்றன. கொலை வழக்குகளைவிட 10 மடங்கு அதிகமாக சாலை விபத்துகளில் மக்கள் இறக்கின்றனர். இந்தியாவில் ஆண்டிற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் சாலை விபத்தில் இறக்கின்றனர்.

இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. விபத்தினை தடுக்க, சாலை விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்வது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சாலைகளை சீரமைப்பது ஆகிய செயல்களை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2016-ல் நடந்த சாலை விபத்தில் 575 பேர் இறந்துள்ளனர். 1394 பேர் நிரந்தர ஊனம் அடைந்தனர். 2019-ல் சாலை விபத்தில் 341 பேர் இறந்துள்ளனர். இவை மேலும் குறைந்து 2020-ல் 279 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக மத்திய அரசு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி உள்ளது. மேலும் சாலை விபத்துகளைத் தடுக்க மத்திய அரசு ரூ.600 கோடி ஒதுக்கியுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் விபத்துகளைக் குறைக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண் டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் நகரம் பாஸ்கர், தாலுகா சுரேஷ்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், அன்புச் செழியன், சுங்கச்சாவடி மேலாளர் நாகேஷ், திட்ட இயக்குநர் யுவராஜ், வருவாய் மேலாளர் தினேஷ் பாண்டே உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்