திருப்பத்தூர் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியரை தாக்கிய முகமூடி கொள்ளையர்கள் கத்திமுனையில் தங்க நகைகள், ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச்சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நேற்று சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜலகம்பாறை அடுத்த சோமலா புரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (70). இவரது மனைவி சிவகாமி (65). இருவரும் அரசுப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்களது மகன், மகள்கள் திருமணமாகி வெளியூரில் தங்கியுள்ளனர். ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மட்டுமே தங்களது விவசாய நிலத்திலேயே வீடு கட்டி வசித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 11.40 மணியளவில் வீட்டின் வெளியே சத்தம் கேட்டது. இதைத்தொடர்ந்து, தெரு நாய்கள் குறைக்கும் சத்தம் விடாமல் கேட்டதால், சந்தேகமடைந்த சிவகாமி கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தார்.
கழுத்தில் கத்தி வைத்து...
அப்போது கதவருகே மறைந் திருந்த முகமூடி கொள்ளையர் ஒருவர் சிவகாமியின் கழுத்தில் கத்தியை வைத்து ‘சத்தம் போடாமல் உள்ளே போ’ என மிரட்டி அவரை வீட்டுக்குள் இழுத்துச்சென்றார்.உடனே, அடுத்தடுத்து 5 கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்து, வெளிப்புற கதவை தாழிட்டனர். பிறகு, சிவகாமியின் கழுத்தில் கத்தியை வைத்து பீரோ சாவி எங்கே எனக்கேட்டு பீரோவை திறந்து, அதிலிருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
அப்போது மற்றொரு அறையில் படுத்திருந்த மணி சத்தம் கேட்டு வெளியே வந்தார். அவரை, முகமூடி கொள்ளையர்கள் தாக்கினர்.
பிறகு, சிவகாமியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் எடையுள்ள தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தம்பதியை அங்குள்ள ஒரு அறையில் தள்ளி வெளிப்புறமாக தாழ்ப்பாள்போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி யோடினர். இதையடுத்து, சிவகாமி கூச்சலிட்டதை கேட்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டனர். கொள் ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த மணி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்ததும்,திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.விஜயகுமார், துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேலு மற்றும் கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
ஆட்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நுழைந்து தம்பதியை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற முகமூடி கொள்ளையர்களை கைது செய்ய துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேலு தலைமையிலும், கிராமிய காவல் ஆய்வாளர் சிரஞ்சீவி தலைமையிலும் 2 தனிப்படைகள் அமைத்து எஸ்பி டாக்டர்.விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
கத்தி முனையில் நகை, பணம் கொள்ளைப்போன இச்சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago