புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 3-வது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று 3-வது நாளாக நடந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பாய், தலையணையோடு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது போலீஸா ருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "கடந்த இரண்டு நாட்களாக எங்களுக்கு வழங்கப்பட்ட உணவு தரமில்லை. அதேபோல, எங்களை கைது செய்து தங்கவைக்கப்படும் மண்டபத்திலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. உரிய உணவு மற்றும் தங்குமிடம் வசதி செய்துதர வேண்டும்" என்றனர். சாலை மறியலில் ஈடுபட்ட 145 பெண்கள் உட்பட 180 பேரை கைது செய்த போலீஸார், தாராபுரம் சாலையிலுள்ள மண்டபத்தில் தங்கவைத்தனர்.
உதகை
நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவர் முத்துகுமார் தலைமையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 11 பெண்கள் உட்பட 65 பேரை போலீஸார் கைது செய்தனர்.இதேபோல, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago