சென்னை குடிநீருக்காக கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லைக்கு 137 நாட்களில் 7 டிஎம்சி கிருஷ்ணா நீர் வந்துள்ளது

By செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக திறக்கப்பட்டுவரும் கிருஷ்ணா நீர், 137 நாட்களில் 7.043 டிஎம்சி என தமிழக எல்லைக்கு வந்தடைந்துள்ளது.

தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஆந்திர மாநில அரசு, சென்னை குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என, 12 டிஎம்சி கிருஷ்ணா நீர் வழங்க வேண்டும்.

ஆனால், கண்டலேறு அணையின் நீர் இருப்பு குறைவால் நடப்பு ஆண்டுக்கான முதல் தவணை கடந்த ஆண்டு ஜூலை தொடங்கியும், அணையில் இருந்து நீர் திறக்காமல் ஆந்திர அரசு இருந்து வந்தது.

இந்நிலையில், தென்மேற்கு பருவ மழையால் கண்டலேறு அணையின் நீர் இருப்பு கணிசமாக அதிகரித்ததால், சென்னை குடிநீருக்காக, கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீரை கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி முதல் ஆந்திர அரசு திறந்து வருகிறது.

தொடக்கத்தில் விநாடிக்கு 1,500 கன அடி என திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், படிபடியாக அதிகரிக்கப்பட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி முதல் விநாடிக்கு 2, 000 கன அடி என திறக்கப்பட்டு வந்தது. பிறகு, படிப்படியாக அதிகரித்தும், குறைக்கப்பட்டும் வரும் கிருஷ்ணா நீர், நேற்றைய நிலவரப்படி, கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 1,100 கன அடி திறக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு திறக்கப்படும் கிருஷ்ணா நீர், கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி இரவு முதல், நேற்று வரையான 137 நாட்களில் 7.043 டிஎம்சி என தமிழக எல்லையான, ஊத்துக்கோட்டை - தாமரைக்குப்பம் ஜூரோ பாயிண்ட்டுக்கு வந்தடைந்துள்ளது.

கிருஷ்ணா நீர் வருகை மற்றும் மழையினால் 11,757 மில்லியன் கன அடி என, மொத்த கொள்ளளவுக் கொண்ட சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஆகிய 5 நீர்த்தேக்கங்களில் நேற்றைய நிலவரப்படி 11,339 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகைஆகிய 5 நீர்த்தேக்கங்களில் நேற்றைய நிலவரப்படி 11,339 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்