கடலூர் வட்டாரத்தில் 1,750 ஹெக்டேரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்க கடலூர் வட்டாரத்துக்கு உட்பட்ட விலங்கல்பட்டு, வாண்டரசன்குப்பம், நடுவீரப்பட்டு மற்றும் சி.என்.பாளையம் ஆகிய கிராமங்களில் நேற்று ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இதில் வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.
கடலூர் வேளாண் உதவி இயக்குநர் பூவராகன், அட்மா திட்டத்தின் கீழ் நடைபெறும் விவசாயிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை கூட்டத்தை கரும்பு விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி தெளிவு பெற கேட்டுக் கொண்டார். கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய பயிர் நோயியல் உதவி பேராசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் நுண்ணுயிரியல் உதவி பேராசிரியர் முனைவர் காயத்ரி ஆகியோர் கரும்பு வயலில் பராமரிக்கப்பட வேண்டிய வழிமுறைகளான மண் அணைத்தல், சோலை உரித்தல்,சொட்டு நீர் பாசனம், திரவ உரப் பயன்பாடு குறித்து விளக்கினார்.
மேலும் நுணிக்குருத்துப் புழு, இடைக்கணுப் புழு தாக்குதலை ஒருங்கிணைந்த முறையில் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் விளக்கப்பட்டது. கரிப்பூட்டை நோய் தாக்கிய வயல்களில் மேற்கொள்ள வேண்டிய பயிர் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆய்வு செய்த கரும்பு வயல்களில் சர்க்கரை கட்டுமானம் குறித்தும் மாதிரிகள் எடுத்து அளவீடு செய்து விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் அழகுமதி, நடுவீரப்பட்டு உதவி வேளாண்மை அலுவலர் விஜயகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago