மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை சாத்தியமாகும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று மாவட்ட திமுக வழக்கறிஞர் அணிக்கான களப்பணி அலுவலகத்தை திறந்து வைத்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
பிப்.28-ம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை நாங்கள் தருவோம். திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இடம்பெறுவது குறித்து ஸ்டாலின் முடிவு செய்வார்.
தமிழகத்தை ஆளும் அதிமுகவினருக்கு தைரியம் இல்லாததால், பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை செய்யப்படவில்லை. மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் 7 பேரின் விடுதலை சாத்தியமாகும் என தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமை வகித்தார்.
தலைமையின் தவறால்...
கரூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் தேர்தல் களப்பணி அலுவலகம் திறப்பு விழா மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ தலைமையில் கரூர் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.இதில், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி அலுவலகத்தை திறந்துவைத்து, பேசும்போது, ‘‘கடந்த முறையே திமுக ஆட்சி தான் வந்திருக்க வேண்டும். 1.1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இதற்கு தலைமை செய்த தவறுதான் காரணம். கூட்டணிக் கட்சிகளுக்கு சீட்டை அள்ளிக்கொடுத்து வீணடித்துவிட்டனர். இம்முறை அப்படி நடக்காது. நடக்க விடமாட்டோம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago