தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை சிசிடிவி கேமரா மூலம் போலீஸார் கண்டுபிடுத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டன.
ஆறுமுகநேரி லட்சுமி மாநகரம், நடுத்தெருவை சேர்ந்த சக்திவேல் மனைவி பால்கனி (83). இவரிடம் கடந்த 27.01.2021 அன்று அடையாளம் தெரியாத 3 நபர்கள் 10 பவுன் நகைகளை பறித்துச் சென்றனர். இதுகுறித்து பால்கனி அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, தூத்துக்குடி புதியபேருந்து நிலையப் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் மகன் சின்னத்துரை (23), திருச்சி சோழிங்கநல்லூரைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன்சபரிநாதன்(24) மற்றும் ஆறுமுகநேரி காமராஜபுரம் பகுதியைச் சேரந்த முத்துகிருஷ்ணன் மகன் விஷ்ணு (19) ஆகியோர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மூவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 10 பவுன் நகைகளை போலீஸார் மீட்டனர். குற்றவாளிகளை விரைவாக கைது செய்து நகைகளை மீட்ட போலீஸாரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago