வேலூர் மாவட்டத்தில் வரும் 8-ம் தேதி முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் அதே நாளில் சசிகலா வருகையால் சலசலப்பு

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி ஈடுபட உள்ள 8-ம் தேதியே வேலூர் மாவட்டம் வழியாக சசிகலா வருகையும் அமைந்துள்ளதால் அதிமுக, அமமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி ஓய்வு எடுத்து வரும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, வரும் 7-ம் தேதி தமிழகம் திரும்புவார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. தமிழக எல்லையில் இருந்து சென்னை வரை வழிநெடுகிலும் சசிகலாவை வரவேற்க அமமுக நிர்வாகிகள் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டப்பேரவை தனி தொகுதியின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்தை நேற்று சந்தித்து அளித்த மனுவில், ‘‘அதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மாவை வரவேற்க முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் என்ற அடிப்படையில் மாதனூர் அடுத்த கூத்தம்பாக்கத்தில் வரவேற்பு அளிக்க உள்ளேன். காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணிக்குள் தனியார் வாடகை ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவி வரவேற்பு அளிக்க அனுமதி வழங்க வேண்டும்’’ எனக் கூறி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சசிகலாவை வரவேற்க ஹெலி காப்டரில் பூக்கள் தூவ அனுமதி கோரிய சில மணி நேரத்துக்கு முன்பாக ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் வரும் 8 மற்றும் 9-ம் தேதிகளில் தமிழக முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என்ற தகவல் வெளியானது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் வருகை தொடர்பான ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது.

இதற்கிடையில், சசிகலா வருகை 7-ம் தேதிக்கு பதிலாக 8-ம் தேதி என்ற தகவல் நேற்று பிற்பகல் வெளியானதும் அதிமுக, அமமுக நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. இதை யடுத்து, ஹெலிகாப்டரில் பூக்கள் தூவ அனுமதி கோரிய ஜெயந்தி பத்மநாபன், தரப்பில் இருந்து 8-ம் தேதிக்கு அனுமதி கோரி மீண்டும் மனு அளித்தனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ஜெயந்தி பத்மநாபன் கூறும்போது, ‘‘சின்னம்மா வருகையை திருவிழாபோல் நடத்த திட்டமிட்டுள்ளேன். அதற்கான ஏற் பாடுகள் செய்யப்பட்டு வருகிறது’’ என்றார். அதேநேரம், வரும் 8-ம் தேதி அரக்கோணத்தில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கும் முதல்வர் பழனிசாமி, சோளிங்கர் மற்றும் ராணிப்பேட்டை வழியாக வேலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் மதிய உணவு அருந்துகிறார். பின்னர், இறைவன்காடு, கே.வி.குப்பம் மற்றும் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்வதுடன் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே இரவு பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேச உள்ளார் என்ற தகவல் காவல் துறையினர் தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் முதல்வர் பிரச்சாரமும், வேலூர் மாவட்டம் வழியாக சசிகலா சென்னை திரும்புவதும் ஒரே நாளில் இருப்பதால் அதிமுக, அமமுகவினர் மத்தியில் மட்டு மல்லாமல் காவல் துறையினர் மத்தியிலும் சலசலப்பு ஏற்பட்டுள் ளது. தேசிய நெடுஞ்சாலை வழியாக இருவரும் கட்டாயம் பயணிக்க வேண்டி இருப்பதால், இருவரின் சந்திப்பும் எதிர் எதிரே இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் காவல் துறைக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் பிரச்சாரம் ஏற்கெனவே பிப்.11 என்று இருந்த நிலையில், திடீரென பிப்.8-ம் தேதி என்று மாற்றப்பட்டது. தற்போது, சசிகலா வருகையும் தேதி மாறியதால் முதல்வரின் தேர்தல் பிரச்சார பயண திட்டத்தில் மாற்றம் வருமா? என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்