சிவகங்கை பகுதியில் எப்போது தொழில் தொடங்கப் போகிறீர்கள் என ஒருமுறை முதல்வர் கே. பழனிசாமியுடன் சண்டையிட்டேன் என கதர்கிராமத் தொழில்கள் நலவாரிய அமைச்சர் ஜி. பாஸ்கரன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில், சாலூரில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இலவச அசில் நாட்டுக் கோழி குஞ்சு வழங்கும் விழா நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் பி. மதுசூதனன் ரெட்டி தலைமை வகித்தார். இதில் பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகளை வழங்கியும், கல்லல் அருகே வேப்பங்குளத்தில் தனியார் நிறுவனம் திறப்பு விழாவிலும் அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேசியதாவது: நான் உள்ளூரில் வசிப்பதால் மக்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறேன். ஆனால் தேர்தல் வந்துவிட்டால் யாரெல்லாமோ வண்ணக் கொடிகளைக் கட்டிக் கொண்டு வாக்கு கேட்டு வரத்தொடங்கி விடுவர். ஆனால், அவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள்.
விவசாயியான முதல்வர் பழனிசாமி மக்களுக்கு தேவை யான அனைத்தையும் செய்வார்.
சிவகங்கை மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இனி குடிநீர் பஞ்சம் வராது. சிவகங்கை மாவட்டத்தில் விவசாயம் அழிந்து வருகிறது. அதனால் தொழில்கள் கொண்டு வர தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். ஒருமுறை முதல்வரிடம் ‘ நீங்கள் உங்கள் பகுதிக்கே தொழிற்சாலைகளைக் கொண்டு செல்கிறீர்கள். எங்கள் பகுதிக்கும் தொழில்கள் கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள். இல்லாவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன். எனக் கூறி சண்டையிட்டேன்.
விரைவில் சிவகங்கை அருகே அரசனூரில் 300 ஏக்கரில் தொழில் பூங்கா தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago