வரட்டனப்பள்ளியில் எருதுவிடும் விழாவில் காயம் அடைந்த சிறுவனை மீட்க தாமதமாக வந்த108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் மீது தாக்குதல்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் உள்ள வரட்டனப்பள்ளி கிராமத்தில் நேற்று 53-ம் ஆண்டு எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 250-க்கும் மேற்பட்ட காளைகளை உரிமையாளர்கள் அழைத்து வந்தனர். குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த 40 காளைகளுக்கு ரூ.6 லட்சம் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மாடுகள் சீறி பாய்ந்து கூட்டத்தில் நுழைந்தது. கூட்டத்தில் இருந்த வரட்டனப்பள்ளி மேல்தெருவைச் சேர்ந்த லோகேஷ் (15) என்பவர் மாடு குத்தியதில் காயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். வாகனம் வர தாமதம் ஏற்பட்டதால், அங்கிருந்தவர்கள் லோகேஷை மீட்டு போலீஸார் வாகனத்தில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே வரட்டனப்பள்ளிக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்த சிலர், பக்கவாட்டில் இருந்த கண்ணாடிகளை உடைத்து ஓட்டுநர் சின்ராயன்(40) என்பவரை தாக்கினர். ஓட்டுநரை மீட்ட போலீஸார், சிகிச்சைக்காக ஒரப்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்