வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்காத 2 டிஎஸ்பிக்கள் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்காத 2 டிஎஸ்பிக்கள் மீது நீதிமன்ற உத்தரவின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: திருச்சியை அடுத்த உத்தமர்சீலி மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவர் 17.11.2019 அன்று தனக்கு சொந்தமான இடத்தில் கழிப்பறை கட்டுவதற்காக பள்ளம் தோண்டிய போது, அதே ஊரைச் சேர்ந்த கலைச்செல்வன் மற்றும் 20 பேர் சேர்ந்து கழிப்பறை கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்திவிட்டனர்.

இதுதொடர்பாக பாலச்சந்திரன் அளித்த புகாரின்பேரில், பட்டியலினத்தவருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கொள்ளிடம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணை அதிகாரியாக அப் போதைய லால்குடி டிஎஸ்பி ராஜசேகர் இருந்தார்.

ஆனால், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை. புகார் அளித்த தன்னையோ, தனது தரப்பு சாட்சிகளையோ அழைத்து விசாரிக்கவில்லை. இந்த வழக்கு தொடர்பாக 60 நாட்களுக்குள் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என திருச்சி முதலாவது கூடு தல் மாவட்ட நீதிமன்றத்தில் பாலச் சந்திரன் மனுத்தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத டிஎஸ்பி ராஜசேகர் மீது கொள்ளிடம் போலீஸார் ஜன.31-ம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது ராஜ சேகர் திருச்சி மாநகரில் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு டிஎஸ்பியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு வழக்கு

திருச்சி மாவட்டம் திருவெறும் பூர் சோழமாதேவியைச் சேர்ந்தவர் பெருமாள். மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் மூரம்பட்டி கிராமத்தில் இவருக்குச் சொந்தமான நிலத்தை, அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்துள்ளார். இதைக் கண்டித்த தன்னை, பெரியசாமி மற்றும் அவரது தந்தை பழனிசாமி ஆகியோர் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதுடன், தாக்க முயன்றதாக புத்தாநத்தம் காவல் நிலையத்தில் 2017-ல் பெருமாள் புகார் அளித்தார்.

இதை விசாரித்த அப் போதைய மணப்பாறை டிஎஸ்பி ஆசைத்தம்பி, சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் பெருமாளை காவல் நிலையத்திலேயே சாதிப் பெயரைச் சொல்லி திட்டி, மன்னிப்பு கேட்க சொன்னதாக கூறப்படுகிறது.

எனவே, இவர்கள் மீது பட்டியலினத்தவருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் பெருமாள் புகார் அளித்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில், டிஎஸ்பி ஆசைத்தம்பி, சார்பு ஆய்வாளர் செந்தில்குமார், பழனிசாமி மற்றும் பெரியசாமி ஆகியோர் மீது புத்தாநத்தம் போலீஸார் கடந்த ஜன.27-ம் தேதி வழக்கு பதிவு செய்தனர்.

தற்போது டிஎஸ்பி ஆசைத்தம்பி தர்மபுரியிலும், சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் நீலகிரியிலும் பணியாற்றி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்