திருப்பூர் மாவட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கூறியதாவது:
தமிழக அரசு மூலமாக 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் பாடங்களுக்கு சுமார் 16549 பகுதிநேர சிறப்பாசிரியர்களாக, தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டோம். குறைந்தபட்ச ஊதியம் என்பதாலும், எதிர்காலத்தில் பணிநிரந்தரம் செய்ய வாய்ப்பு குறைவு என்பதாலும், பலர் இதிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர்.
தற்போது 12483 பகுதிநேரசிறப்பாசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எங்களை2012-ம் ஆண்டு பணிநியமனம் செய்தபோது ரூ.5000 மாத ஊதியமாக வழங்கினார்.
2014-ம் ஆண்டு மேலும் ரூ.2000 உயர்த்தி ரூ.7000 ஆக வழங்கினார். 2017-ம் ஆண்டு மேலும் ரூ.700 மட்டும் உயர்த்தியதுடன், இன்றுவரை ரூ.7700 என்ற குறைவான சம்பளத்தில், மூன்று மணி நேரம் வீதம் வாரத்தில் 3 அரை நாட்கள், மாதம் 12 அரை நாட்கள் பணிபுரிந்து வருகிறோம்.
இந்நிலையில், தற்போதுதமிழக அரசு அறிவித்துள்ள 30 சதவீத ஊதிய உயர்வு (அதாவது ரூ.2,300) எங்களின் பணிச்சுமையை இரட்டிப்பாக்கியுள்ளது. ஊதியத்தை மட்டும்இரட்டிப்பாக்கவில்லை. மாதம் 12 அரை நாட்கள் பணியாற்றி வந்த நிலையில், 12 முழு நாட்கள் பணிபுரிய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது, பொருளாதார ரீதியாக எங்களுக்கு பெரும் பின்னடைவு. இன்றைய கரோனா காலத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் அதிக அளவில் பணியிழப்பு நடைபெற்றுள்ளதால், வேறு எந்தவொரு பணிக்கும் இனி செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
எனவே, கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரமில்லாமல் பணிபுரியும் எங்களுக்கு, வாரத்தின் அனைத்து நாட்களிலும் முழுநேரம் பணிபுரியவும், அதற்குத் தகுந்த ஊதியத்தை உயர்த்தி வழங்கவும், பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு மே மாத ஊதியத்தை கட்டாயம் வழங்கவும், அரசின் சலுகைகள், இதர பணிப் பயன்கள் அனைத்தும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள்கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago