தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோ வாட் உயர் மின் வழித்தட திட்டத்தை சாலையோரம் புதைவடமாக (கேபிள்)அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் உயர் மின் கோபுர திட்டங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படும் விவசாயிகள், திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே படியூரில் 14-வது நாளாக நேற்றும் தொடர் காத்திருப்புப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டி, மண்டியிட்டு விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.
இதேபோல, உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்ட விவகாரத்தில் உரிய இழப்பீடு வழங்கக் கோரி, தாராபுரம் அருகே பெல்லம்பட்டியில் நேற்று 7-வது நாளாக விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் கூறும்போது, "தாராபுரத்தை அடுத்த நொச்சி பாளையம், புகலூர் கிராமத்தில் பவர்கிரிட் நிறுவனம் செயல் படுகிறது. காற்றாலைகள் மூலமாக உற்பத்தியாகும் மின்சாரம், விவசாய விளைநிலங்கள் வழியே அமைக்கப்பட்ட உயர் மின் கோபுரங்கள் மூலமாக கேரளா மாநிலம் திருச்சூர் வரை கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக கையகப்படுத்தப் பட்ட விவசாய நிலங்களுக்கான வெளிச்சந்தை மதிப்பீட்டில் உரிய இழப்பீடும், மின்கோபுரம் அமைக்கப்பட்ட இடங்களுக்கு மாத வாடகையும் வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட சின்னரிபாளையம், பெல்லம்பட்டி, முத்தியம்பட்டி, எரகாம்பட்டி, மானூர்பாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கஞ்சித் தொட்டி திறந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அரசு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் நடைபெறும்" என்றனர்
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago