கலப்பு மருத்துவத்தை தடை செய்ய வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி

By செய்திப்பிரிவு

கலப்பு மருத்துவத்தை தடை செய்ய வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று முன்தினம் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பேரணி தொடங்கியது. நேற்று கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த பேரணியை, இந்திய மருத்துவ சங்கத்தின் கிருஷ்ணகிரி கிளை தலைவர் மருத்துவர் விஜயக்குமார் வரவேற்றார்.

முதன்மை மருத்துவ செயலாளர் மருத்துவர் சரவணன் பேரணியை மீண்டும் தொடங்கி வைத்தார். அப்போது நிர்வாகிகள் பேசியதாவது: மத்திய அரசு, 58 வகையான நவீன அறுவைச் சிகிச்சைகளை பட்டியலிட்டு, ஆயுர்வேத மருத்துவர்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. அறுவைச் சிகிச்சை முறைகள் நவீன மருத்துவத்தை சார்ந்துள்ள சூழ்நிலையில், இதுகுறித்து முன் அனுபவம் இல்லாத ஆயுர்வேத மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது உயிருக்கு ஆபத்தாக அமையும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த கலப்பு மருத்துவத்தை தடை செய்ய வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் விழிப்புணர்வு இருசக்கர வாகன தொடர் பேரணி நடைபெற்று வருகிறது.

அதன்படி தமிழகத்தில், 4 மண்டலமாக பிரித்து ஒரு குழுவிற்கு 20 பேர் என தொடர் பேரணி நடத்தப்படுகிறது. 4 மண்டலங்களில் இருந்து வரும் பேரணி திருச்சியில் ஒன்றிணைந்து சென்னைக்கு செல்ல உள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் செயற்குழு உறுப்பினர் மருத்துவர் தனசேகரன், முன்னாள் தலைவர் மருத்துவர் ஜோ, மூத்த உறுப்பினர்கள் மருத்துவர்கள் வெங்கடேசன், கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்