காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம் 120 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிப்பு

By செய்திப்பிரிவு

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 120 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் காவலான் கேட் அருகே அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் லெனின் தலைமையில் மறியல் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாவட்டச் செயலர் துரை மருதன், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் சீத்தாராமன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இந்த மறியலின்போது புதியஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கரோனா தொற்றை காரணம் காட்டி பறிக்கப்பட்ட அகவிலைப்படி, மற்றும் சரண்டர் ஆகியவற்றை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதில் 80 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல் திருவள்ளூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் அருகே சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பங்கேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்திரசேகரன், மாவட்டச் செயலர் பாண்டுரங்கன் உள்ளிட்ட 40 பேரைதிருவள்ளூர் நகர போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்