திண்டிவனம், விருத்தாலத்தில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில் அரசு பேருந்துகள் மோதி 3 பேர் உயிரிழந்தனர்.
திண்டிவனம், கிடங்கல் 2 பகுதியைச் சேர்ந்தவர்கள் காமராஜ் மகன் கரண் (21), குமார் மகன் ராம்(29). பெயிண்டர்களான இருவரும் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
காவேரிப்பாக்கம் ஏரிக்கரை அருகே வந்தபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற அரசு பேருந்து எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் கரண்,ராம் இருவரும்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்த ராம் திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகவல் அறிந்த திண்டிவனம் போலீஸார் இறந்த இருவரின் உடல்களை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மற்றொரு விபத்து
விருத்தாசலத்தை அடுத்த புதுக்கூரைப்பேட்டைக் கிராமத்தைச் சேர்ந்த கணேசன்(40) என்பவர்,தனது நண்பரான கண்டியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவரை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் விருத்தாசலம் நோக்கி சென்றுள்ளார். பெரியார் நகரை கடந்து செல்லும் போது, எதிரே வந்த அரசுப்பேருந்து மோதியது. இதில் பலத்தக் காயமடைந்து, சம்பவ இடத்திலேயே கணேசன் உயிரிழந்தார். உடன் சென்ற ராமமூர்த்தி பலத்தக் காயங்களுடன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த விபத்து தொடர் பாகவிருத்தாசலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 பேர் படுகாயம்
சிதம்பரம் அருகே சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (22). இவர் நேற்று ஊரிலிருந்து மினி வேனில் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சிதம்பரம் அண்ணாமலை நகரில் இறக்கி விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அண்ணாமலை நகர்ரயில்வே மேம்பாலத்தில் ஏறி இறங்கியபோது எதிர்பாராதவிதமாக மினி வேனில் பிரேக் பிடிக்கவில்லை. தாறுமாறாக ஓடிய மினிவேன் சிதம்பரம் அரசு மருத்துவமனை அருகே பழக்கடை வைத்திருந்த சிதம்பரத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (70), அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்திருந்த சிதம்பரத்தைச் சேர்ந்த வீரமணி (65), கருப்பூரைச் சேர்ந்த சாலையோர வியாபாரி இந்திராணி (60) ஆகியோர் மீது மோதியது. மேலும் பேருந்துக்காக காத்திருந்த மேலகுறியாமங்கலத்தைச் சேர்ந்த நந்தினி (19), ராம் (19), உத்தமசோழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (65), புதுச்சேரியைச் சேர்ந்த தினேஷ் (22) ஆகியோர் மீதும் மோதியது. இதில் படுகாயமடைந்த 7 பேரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஓட்டுநர் விக்னேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago