ஓய்வூதியர் சங்கத்தினர் தொடர் முழக்கப் போராட்டம்

By செய்திப்பிரிவு

அனைத்து வகை ஓய்வூதியர்களுக்கும் குடும்ப நல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின்ர் நேற்று பல்வேறு இடங்களில் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.வி.செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பெ.ஜீவானந்தம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில உதவிச் செயலாளர் என்.சண்முகம், தமிழ்நாடு ஓய்வுபெற்ற மின் ஊழியர் நல அமைப்பின் மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர்.

இந்தப் போராட்டத்தில், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம ஊழியர், வனத் துறை காவலர் மற்றும் ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும். முடக்கப்பட்ட 21 மாத நிலுவைத் தொகை மற்றும் முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும். அனைத்து வகை ஓய்வூதியர்களுக்கும் குடும்ப நல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். 9 மாதங்களாக வழங்கப்படாத குடும்ப பாதுகாப்பு நிதியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.மதிவாணன், எஸ்.துளசிராமன், எம்.சிராஜூதீன், ஜெ.சுந்தரராஜன், பி.புருஷோத்தமன், எஸ்.குருநாதன், எஸ்.முருகேசன், எம்.சேகர், ஆர்.ராதாகிருஷ்ணன், பி.சந்தனமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல, அரியலூரில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் துரைவேலுசாமி, பெரம்பலூரில் மாவட்டத் தலைவர் ராஜகுமாரன், மாவட்ட துணைத் தலைவர் நீலமேகம், மாவட்டச் செயலாளர் முருகவேல், கரூரில் மாவட்டத் தலைவர் து.சாமுவேல் சுந்தர பாண்டியன் ஆகியோர் தலைமையில் திரளான ஓய்வூதியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூரில் ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் இர.கலியமூர்த்தி, மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜ கோபாலன், மாநிலச் செயலாளர் குரு.சந்திரசேகரன், திருவாரூரில் சங்க மாவட்டத் தலைவர் தி.சீனிவாசன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்