கரோனா ஊரடங்கு காலத்தில் ஊர்க்காவல் படையினர் சிறப்பாக பணியாற்றினர் என வேலூர் சரக டிஐஜி காமனி தெரிவித்தார்.
வேலூர் நேதாஜி விளை யாட்டரங்கில் ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தேர்வு செய்யப் பட்ட ஊர்க்காவல் படை வீரர்கள் 31 பேருக்கு பயிற்சி நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு ஊர்க்காவல் படை சரக தளபதி வி.என்.டி.சுரேஷ் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். மண்டல தளபதி குமரன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், வேலூர் சரக டிஐஜி காமினி சிறப்பு விருந்தி னராக பங்கேற்று வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்த ஊர்க்காவல் படையினருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
பின்னர் அவர் பேசும்போது, ‘‘ஊர்க்காவல் படை சீருடை என்பது எல்லோருக்கும் கிடைப்ப தில்லை. அது உங்களுக்கு கிடைத்திருப்பதே பெரிய பரிசாகும். ஊர்க்காவல் படையில் சேர ஆயிரக்கணக்கானவர்கள் போட்டிக்கு மத்தியில் இந்த பணி உங்களுக்கு கிடைத்துள்ளது. ஊர்க்காவல் படை பணி கட்டுப்பாடுகள் நிறைந்தது. இதில், செய்யும் தவறுகள் காவல் துறையை சேரும்.
கரோனா காலத்தில் ஊர்க்காவல் படையினரின் பணி சிறப்பாக இருந்தது. குறிப்பாக, பெண் ஊர்க்காவல் படையினர். வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் ஊர்க்காவல் படையினர் நூறு சதவீதம் சிறப்பாக பணியாற்ற வேண்டும். எந்த இடத்தில் பணி செய்தாலும் பொது மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் முன்னுரிமை அளித்து பணியாற்ற வேண்டும்’’ என்றார்.
முன்னதாக, ஊர்க்காவல் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் டிஐஜி காமினி ஏற்றுக்கொண்டார். அப்போது, வேலூர் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் விநாயகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago