திருப்பூரில் மாநகரில் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில், திருப்பூர் குமரன் சாலையிலுள்ள நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன் நேற்று நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்துக்கு திருப்பூர் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் தலைமை வகித்தார்.
திருப்பூர் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், நான்காவது குடிநீர்த்திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம்என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுவதை காரணம்காட்டி சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டுள் ளன. ஆனால், பணிகளை முடித்தஎந்த பகுதியிலும் தோண்டப்பட்ட பள்ளங்களை முறையாக மூடி செப்பனிடப் படவில்லை.
இதனால், நகர் முழுவதும் சாலைகள் பழுதடைந்தும், குண்டும், குழியுமாகவும் உள்ளன. பலர் தடுமாறி விழுந்தும், வாகனங்கள் மோதியும் விபத்தில் சிக்கிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
எனவே, திருப்பூரில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாநகர சாலைகள், வீதிகள் உட்பட அனைத்து சாலைகளையும் முழுமையாக சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, மோசமான சாலைகளால் விபத்தில் சிக்கி கை, தலையில் காயமடைந்ததுபோல இளைஞர்கள் சிலர் கட்டுப்போட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். காவல் உதவி ஆணையர் வெற்றிவேந்தன் தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் மற்றும் மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் கூறும்போது, "அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 15 நாட்களில், நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி சாலைகளை செப்பனிடுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. பணிகளை விரைவாக நிறைவேற்றி முடிக்காவிட்டால், அடுத்தகட்டமாக மாநகரில் குடியிருப்புகள் அளவில் 200 மையங்களில் அந்தந்த பகுதி மக்களைத் திரட்டி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago