திருப்பூரில் கொடுத்த கடனை திருப்பி அளிக்காத நண்பரை கழுத்தறுத்து கொலை செய்த இளைஞர், தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "திருப்பூர் தெற்கு காவல் எல்லைக்கு உட்பட்ட டூம்லைட் பகுதியைச் சேர்ந்தவர் ஷாருக்கான் (25). தாராபுரம் சாலையிலுள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் கட்டிங் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவரது நண்பரான செல்லாண்டியம்மன் துறை ஹவுசிங் யுனிட் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (24), பெரியகடை வீதி பகுதியிலுள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் மணிகண்டனிடம் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளார் ஷாருக்கான். இந்நிலையில் பணத்தை மணிகண்டன் திரும்ப கேட்டபோது, ஷாருக்கான இழுத்தடிப்பு செய்து வந்துள்ளார். அதிருப்தி அடைந்த மணிகண்டன், நேற்று முன்தினம் இரவு தான் பணிபுரியும் பின்னலாடை உற்பத்தி நிறுவனத்துக்கு ஷாருக்கானை அழைத்துச்சென்று பணத்தை கேட்டுள்ளார். அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஷாருக்கானின் கழுத்தை அறுத்து மணிகண்டன் கொலை செய்துள்ளார். உடலை அங்கே விட்டுவிட்டு, ஊத்துக்குளியில் உள்ள சகோதரி வீட்டை நோக்கி மணிகண்டன் சென்றுள்ளார். இருப்பினும், கொலை செய்ததால் ஏற்பட்ட மனஉளைச்சலில், செல்லும் வழியில் தானும் விஷம் குடித்துள்ளார். பின்னர், சகோதரி வீட்டுக்கு சென்று சம்பவம் குறித்து கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மணிகண்டனை சேர்த்துள்ளனர். காவல் ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான தெற்கு போலீஸார் சென்று, ஷாருக்கான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மணிகண்டன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago