சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாக்கிற்காக பணம் கொடுத்தால் வாங்காதீர்கள் என காலில் விழுந்து கெஞ்சிக் கேட்கிறேன் என சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் பேசியதாவது:
நமது கட்சியிலிருப்பவர்கள் ரசிகர்களாக இருந்து, என்னை இன்னும் நடிகனாகவே பார்த்து வருகின்றனர். கட்சி தொடர்ந்து ரசிகர் மன்றமாக பயணித்திட முடியாது. கட்சி வளர்ச்சிக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். சட்டப்பேரவைத் தேர்தலின் போது, வாக்குக்காக பணம் கொடுத்தால் வாங்காதீர்கள். உங்கள் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்கிறேன். உங்களது விலைமதிப்பில்லாத வாக்கினை விற்பது அநியாயமானது. சமத்துவ மக்கள் கட்சி தற்போது அதிமுக கூட்டணியில்தான் உள்ளது. நாளை வேறுமாதிரி ஏதேனும் நடந்தால் அதற்கு தயார் செய்யவே இது போன்ற கூட்டங்களில் பங்கேற்று வருகிறேன், என்றார்.
கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் ராதிகா சரத்குமார் பேசும்போது, சமத்துவ மக்கள் கட்சிக்கு வருகின்ற தேர்தல் முக்கியமான தேர்தலாகும். இரண்டு அல்லது மூன்று தொகுதிகளைப் பெறுவதற்காக இனிமேல் கட்சி நடத்த மாட்டேன் என கட்சித்தலைவர் அறிவித்துள்ளார். நடிப்பதற்கான நேரத்தை குறைத்துக் கொண்டு, கட்சிக்காக இனிமேல் அதிக நேரம் செலவிடவுள்ளேன். தமிழகத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் ஆதரவில்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்பதை நிரூபிக்க கட்சியினர் அனைவரும் உழைக்க வேண்டும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago