காவேரிப்பட்டணம் அருகே சாலையோரம் நின்றிருந்த அரசுப் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (24). அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் லிங்கா (எ) லிங்கேஸ்வரன் (24), சுரேந்தர் (21), பிரசாந்த் (25), கவுதம் (17), பரணி (23), அசோக் (18). இவர்கள் 7 பேரும், காரில் நேற்று நள்ளிரவில் பவானியில் இருந்து பெங்களுருக்கு சுற்றுலா புறப்பட்டனர் .
காரை, சேலம் எடப்பாடி வெள்ளரிவெள்ளி கிராமத்தைச் சேர்ந்த பூபதி (25) ஓட்டிச் சென்றார். நேற்று அதிகாலை 4 மணியளவில் காவேரிப்பட்டணம் பகுதியில் இவர்களது கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்தை சாலையோரம் நிறுத்தியதும், பேருந்தில் பயணம் செய்த ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தைச் சேர்ந்த தேவராஜ் (29) என்பவர், கீழே இறங்கி சாலையை கடக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஆம்னி கார், தேவராஜ் மீது மோதியதுடன், நிலைதடுமாறி பேருந்தின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற பூபதி, சிவக்குமார், லிங்கா (எ) லிங்கேஸ்வர், சுரேந்தர், பிரசாந்த் மற்றும் சாலையை கடக்க முயற்சித்த தேவராஜ் ஆகிய 6 பேரும் உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி டிஎஸ்பி சரவணன், காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், எஸ்ஐ அறிவழகன் மற்றும் போலீஸார், காயம் அடைந்த, கவுதம், பரணி, அசோக் உள்ளிட்ட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago