திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள நசரேத்பேட்டை ஊராட்சியில் நேற்று `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருவள்ளூர் மத்திய, மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர்களான சா.மு.நாசர், பூபதி, டி.ஜெ.கோவிந்தராஜன், அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன், பூந்தமல்லி, திருவள்ளூர் எம்எல்ஏக்களான ஆ.கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
நிகழ்வில், பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்கள் ஒரு பெட்டியில் பூட்டி சீல் வைக்கப்பட்டன. அப்போது, மு.க.ஸ்டாலின், ``திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 100 நாட்களில் மனுக்களில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்போம்'' என்றார்.
தொடர்ந்து ஸ்டாலின் பேசியதாவது:
ஆரணியில் கடந்த 29-ம் தேதி நடந்த `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் பேசிய எழிலரசி என்ற பெண், `ராணுவ வீரரான என் தந்தை சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். அவருக்கான ஓய்வூதியம் இன்னும் கிடைக்காத நிலையில், 5 மாதங்களுக்கு முன்பு காஸ் சிலிண்டர் வெடித்ததில் என் அம்மாவும் இறந்துவிட்டார். நிதி உதவி கேட்டு நானும், என் தம்பியும் அரசிடம் பலமுறை மனு அளித்தும் நிதி உதவி கிடைக்கவில்லை’ என்று தெரிவித்தார்.
ஆகவே, அவரது பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினேன். மாலை 6 மணிக்கு இந்த சம்பவம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு அதிமுக அரசு, அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கில் ரூ.2 லட்சத்தை செலுத்தியுள்ளது. இதற்கிடையே, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் ‘ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துகிறார். நாங்கள் 2 மாதங்களுக்கு முன்பு எழிலரசிக்கு நிதி கொடுத்துவிட்டோம்’ என்று ட்விட்டரில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 29-ம் தேதிதான் அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. எனவே பொய்யான தகவலை வெளியிட்டதற்கு அதிமுக தொழில்நுட்ப பிரிவு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன்.
வருகிற சட்டப்பேரவை தேர்தல் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல்தான். பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரின் அரசியல் நடவடிக்கைகள் தவறானது. அவர்களை அகற்றிவிட்டு உன்னதமான ஆட்சியை தமிழகத்துக்கு அமைத்துத் தர மக்கள் முன் நான் உறுதியெடுத்திருக்கிறேன்.
வீட்டுக்கு விளக்காக இருப்பேன்; நாட்டுக்கு தொண்டனாக இருப்பேன்; மக்கள் கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன்; மக்களுக்காக கவலைப்படும் தலைவனாக இருப்பேன் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago