மார்கழி மாதம் பெய்த மழையால் பயறு வகை பயிர்கள் விளைச்சல் பாதிப்பு

By செய்திப்பிரிவு

மார்கழி மாதம் பெய்த மழையால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவரை, உளுந்து, காராமணி உள்ளிட்ட பயறு வகை பயிர்கள் விளைச்சல் 50 சதவீதம் குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானாவாரி பயறு வகை பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக துவரை 27 ஆயிரத்து 982 ஏக்கரிலும், உளுந்து 2 ஆயிரத்து 100 ஏக்கரிலும், காராமணி ஆயிரம் ஏக்கரிலும் சாகுபடி செய்யப்படுகிறது. நிகழாண்டில் பெய்த மழையால் மானாவாரி பயறு வகை பயிர்களை அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்.

பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்திருந்தாலும், தொடர் மழையால் 50 சதவீதத்திற்கு மேல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, ‘‘துவரை, உளுந்து, காராமணி உள்ளிட்ட பயறு வகை பயிர்கள் மானாவாரி நிலங்களில் மழையை நம்பி மட்டுமே பயிரிடப்படுகிறது. கடந்த ஆண்டில் ஓரளவிற்கு நல்ல மழைப்பொழிவு இருந்ததால் பயறு வகை பயிர்கள் வழக்கத்தைவிட 20 சதவீதம் கூடுதலாக பயிரிடப்பட்டன. பூக்கள் பூக்கும் தருணத்தில், பெய்த மழையால் பயிர்களில் காய் பிடிக்கவில்லை.

செடிகள் நன்கு வளர்ச்சி அடைந்திருந்தாலும், காய்கள் குறைவாக உள்ளன. ஒரு ஏக்கருக்கு நிலத்தை உழுதல், விதை, மருந்து உள்ளிட்டவற்றுக்கு அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் வரை செலவாகிறது. பயறு வகை பயிர்களில் ஏக்கருக்கு 600 கிலோ வரை மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது 300 கிலோ கிடைப்பது கூட சந்தேகம். இதனால் பயிறு வகை பயிர்கள் விதைத்த விவசாயிகளுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வேளாண்மை அலுவலர்கள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் கூறும்போது, விவசாயிகளுக்கு எளிய தொழில்நுட்பங்கள் மூலம் துவரை, உளுந்து, காராமணி பயிரிட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பயிர்களும் நன்கு வளர்ச்சியடைந்த தருணத்தில், மார்கழி மாதம் தொடர்ந்து 20 நாட்கள் பெய்த மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டது,’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்