கிருஷ்ணகிரி சென்னை சாலையில் நிறுத்தப்படும் பேருந்துகளால் தான் நெரிசல் ஏற்படுவதாக கூறி நேற்று ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி - சென்னை சாலையில் ஆட்டோ நிறுத்தம் உள்ளது. இங்கு கடந்த 22 ஆண்டுகளாக ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. தற்போது இச்சாலையில் நடுவே தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை சாலையில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது எனவும், மாரியம்மன் கோயில் அருகே ஆட்டோக்கள் நிறுத்தத்தை மாற்றிக் கொள்ளுமாறும் போக்குவரத்து போலீஸார் தெரிவித்தனர்.
இதனிடையே நேற்று மாலை ஆட்டோ ஓட்டுநர்கள் போக்குவரத்து நெரிசலுக்கு, பேருந்துகளும், எதிர்திசையில் வரும் வாகனங்களும் தான் காரணம் என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ ஓட்டுநர்கள் கூறும்போது, ‘‘எங்களால் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லை. ஆனால் சென்னை சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பயணிகளை ஏற்றிச் செல்ல சுமார் 15 நிமிடங்கள் நிற்கின்றன.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. பேருந்துகள் நிறுத்த நேரக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். மேலும் ஆட்டோ ஸ்டேண்ட் தொடர்ந்து இதே இடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
தகவலறிந்து வந்த போலீஸார், ஆட்டோ ஓட்டுநர்களை சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப் படும், என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago