காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும்திருவள்ளூர் மாவட்டங்களில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்க வலியுறுத்தி, அரசுபோக்குவரத்துக் கழக பணிமனைகளின் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்காமல் தாமதித்து வருவதால், பேச்சுவார்த்தை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளின் முன்பு, தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் நேற்றுஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்படி, காஞ்சிபுரம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் முன்பு எல்பிஎப் தொழிற்சங்கத்தின் மண்டல தலைவர் சுதாகரன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை ஐஎன்டியுசி பேரவைத் தலைவர் ராமநீராளன் தொடங்கிவைத்தார்.
இதில், தொழிற்சங்க நிர்வாகிகளான தயாளன், சதாசிவம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். சிஐடியு தொழிற்சங்க மண்டல பொதுச்செயலர் நந்தகோபால் உட்பட 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளை ஒருங்கிணைத்து செங்கல்பட்டு நகரப் பகுதியில் உள்ள பணிமனையின் முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தின் மண்டல பொதுச்செயலர் கமலகண்ணன் தலைமையில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதில், எல்பிஎப், சிஐடியு, எச்எம்எஸ் உட்பட 9-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில்..
அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பொன்னேரி,ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளை ஒருங்கிணைத்து, திருவள்ளூர் - ஜே.என்.சாலையில் உள்ள பணிமனையின் முன்பு எல்பிஎப் தொழிற்சங்கத்தின் காஞ்சிபுரம் மண்டலப் பொருளாளர் முரசொலி சேகர் தலைமையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலர் ராஜேந்திரன் மற்றும் எச்எம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago