சிவகங்கை மாவட்டம், திருப்பத் தூரில் வாரச்சந்தையை வேறு இடத்துக்கு மாற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பழைய இடத்திலேயே வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்தனர்.
திருப்பத்தூரில் பேரூராட்சி அலுவலகம் அருகே வாரந்தோறும் சனிக்கிழமை சந்தை நடந்து வந்தது. இந்நிலையில் வாரச்சந்தையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக வாரச்சந்தையை தற்காலிகமாக மதுரை ரோட்டில் தனியார் திரையரங்கு எதிரே உள்ள இடத்துக்கு மாற்றியது.
வாரச்சந்தை மாற்றம் குறித்து நேற்று முன்தினம் இரவு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால் நேற்று காலை வியாபாரிகள் புதிய இடத்துக்குச் செல்ல மறுப்பு தெரிவித்து பழைய இடத்திலேயே வழக்கம்போல் கடைகளை நடத்தினர்.
பொதுமக்கள் புதிய இடத்துக்குச் சென்று, அங்கு சந்தை இல்லாதது கண்டு குழப்ப மடைந்தனர். பிறகு மீண்டும், பழைய இடத்துக்கு வந்து காய்கறி, பழங்களை வாங்கிச் சென்றனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: எங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்காமல் திடீரென இடத்தை மாற்றிவிட்டனர். திருப்பத்தூரில் வாரச்சந்தை 75 ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு கழிப்பறை வசதி மட்டுமே இல்லை. அதை செய்து கொடுத்தால்போதும். ஆனால் சீரமைக்கிறோம் என்ற பெயரில், கடைகளை வேறு நபர்களுக்கு ஒதுக்கிவிட வாய்ப்புள்ளது.
இதனால் சந்தையை சீரமைத்த பிறகு ஏற்கெனவே வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகளை ஒதுக்க வேண்டும். இதுதொடர்பாக எங்களுக்கு உறுதிமொழி அளித்தால் மட்டுமே புதிய இடத்துக்குச் செல்வோம். மேலும் புதிதாக அறிவிக்கப்பட்ட இடத்தில் எந்தவிதமான வசதியும் இல்லை. அங்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திய பிறகு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago