அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் 30,798 பேர் கடந்த ஓராண்டாக மாத ஊதியம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
அரசு பள்ளிகளில் வகுப்பறை மற்றும் கழிப்பறைகளை மாணவர்களைக் கொண்டே சுத்தம் செய்வதாக புகார்கள் எழுந்தன.
அதையடுத்து, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தூய்மைப் பணியை மேற்கொள்ள கடந்த 2016 ஜனவரி முதல் பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒப்புதலுடன் தூய்மைப் பணியாளரை நியமித்துக்கொள்ள கல்வித் துறை உத்தரவிட்டது. தொடக்கப் பள்ளியில் தூய்மைப் பணியை மேற்கொள்வோருக்கு மாதம் 1,000 ரூபாயும், நடுநிலைப் பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வோருக்கு ரூ.1,500-ம் ஊதியமாக வழங்கப்படுகிறது.
இவர்களுக்கான ஊதியத்தை 4 மாதங்களுக்கு ஒருமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலம் பள்ளி மேலாண்மைக் குழு கணக்கில் வரவு வைக்கப்பட்டு, துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரிக்குப் பின்னர் இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் 23,939 ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளும், 6,859 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இதில் தலா ஒரு தூய்மைப் பணியாளர் வீதம் மொத்தம் 30,798 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஊதியமின்றி சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள வீரலட்சுமி கூறுகையில், பள்ளியில் தூய்மைப் பணியை மேற்கொள்வதால் வேறு கூலி வேலைக்குச் செல்ல முடியவில்லை.
காலையில் கழிப்பறைகள், வகுப்புறைகள், பள்ளி வளாகம், பள்ளியின் முன்புறம் உள்ளிட்ட பகுதிகளை துப்புரவு செய்ய வேண்டும். மதியம் மாணவர்கள் சத்துணவு சாப்பிட்ட பின்னர் சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
இதற்கு ஒரு நாளைக்கு கூலி ரூ.33 மட்டுமே. கடந்த 11 மாதங்களாக இந்த ஊதியமும் வழங்கப்படவில்லை. இந்த வேலை அரசு வேலையாக மாறிவிடும், குறைந்தது மாதம் ரூ.10 ஆயிரமாகவது ஊதியமாகக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.
என்னைப் போன்று தமிழகம் முழுவதும் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் ஊதியமின்றி சிரமப்படுகின்றனர். தமிழக அரசு உடனே தனி கவனம் செலுத்தி தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago