குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெற கோரி உண்ணாவிரதம்

டிராக்டர் பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் மீது பதிவு செய்யப் பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாட்டில், அகில இந்திய விவசாயி கள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நேற்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் எம்.பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், திருவை யாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், போராட்டக்குழு நிர்வாகிகள் பா.பாலசுந்தரம், காளியப்பன், திருநாவுக்கரசு, பழனிராசன், அருணாசலம், அருண்சோரி உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில், பருவம் தவறி பெய்த தொடர் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நெல், கடலை, உளுந்து மற்றும் அனைத்து பயிர்களுக்கும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் பாரபட்சமின்றி வழங்க வேண்டும். விவசாயக் கடன்களை முழுமை யாக தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை அனைவருக்கும் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய வேளாண் சட்டங்கள், மின்சார சட்ட திருத்தத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும். டெல்லியில் போராடிய விவசாயி களுக்கு ஆதரவு தெரிவித்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள், இயக்கங்களின் நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டன.

இதே கோரிக்கைகளை வலி யுறுத்தி, தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் என்.குருசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார் உள்ளிட்டோர் பேசினர். கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் யேசுதாஸ் தலைமை வகித்தார். இதேபோல, பேராவூ ரணி, திருவோணம், பூதலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன.

கரூரில்...

அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில், கரூர் வட்டாட்சியர் அலு வலகம் முன் நேற்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார்.

சுயஆட்சி இந்தியா கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் கிறிஸ்டினா உள்ளிட்டோர் பேசினர்.

ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோ.ராஜசேகர் வரவேற்றார். சுயஆட்சி இந்தியா கட்சி ரா.மஞ்சுளா நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE