வேலூரில் தொழுநோய் விழிப்புணர்வு விழா நேற்று நடைபெற்றது.
வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் தொழுநோய் விழிப்புணர்வு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் வெற்றிசெல்வி வரவேற்றார். துணை இயக்குநர் (தொழுநோய்) மருத்துவர் பிரீத்தா திட்ட விளக்கவுரை நிகழ்த்தினார்.
இதில், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசும்போது, ‘‘தொழுநோய் பாதிக்கப்பட்டவர்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை உண்ண வேண்டும். தொழுநோய் கண்டறிந்ததும் தொடர் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். மகாத்மா காந்தி, அன்னை தெரசா போன்றோர் தொழுநோயாளிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளனர். தொழுநோய் உள்ளவர்களிடம் நெருங்கிப் பழகினால் நோய்த் தொற்று ஏற்படாது என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். தொழுநோய் இல்லாத மாவட்டமாக வேலூரை உருவாக்க அனைவரும் விழிப்புடன் இருந்து நோயை குணப்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன், மாநகர மருத்துவ அலுவலர் சித்ரசேனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago